தருமபுரி மாவட்டத்தில் போலி சீட்டு நிறுவனங்கள், அனுமதியற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் அதிக வட்டி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் பணம் இரட்டிப்பு, மாதம் தவறாமல் உறுதியான வருமானம், ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் லாபம் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் தருமபுரி, நல்லம்பள்ளி, பெண்ணாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சில போலி சீட்டு மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. துண்டுப் பிரசுரங்கள், அச்சிட்ட சுவரொட்டிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக இந்த மோசடி விளம்பரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பல ஆண்டுகள் உழைத்துச் சேர்த்த சேமிப்பை இதுபோன்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி இழந்துவிட வேண்டாம் என்றும், அனுமதியற்ற நிறுவனங்களில் முதலீடு செய்தால் பணத்தை மீட்பது மிகக் கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி வட்டியை விட பல மடங்கு அதிக வருமானம் தருவதாகக் கூறுதல், "இன்றே சேருங்கள், இல்லையெனில் வாய்ப்பு போய்விடும்" என அவசரப்படுத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தால் கமிஷன் தரும் சங்கிலித் தொடர் (Chain link) திட்டங்கள் போன்றவை மோசடியின் முக்கிய அறிகுறிகளாகும். மேலும், நிறுவனத்தின் முறையான பதிவு ஆவணங்களைக் காட்ட மறுப்பது, முறையான ரசீது இன்றி ரொக்கமாகப் பணம் கேட்பது போன்ற நிறுவனங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
முதலீடு செய்யும் முன் அந்நிறுவனம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா, முறையான உரிமம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். முகவரி மற்றும் உரிய அனுமதியில்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மற்றும் முதலீட்டுச் செயலிகள் மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அரசு அனுமதி பெற்ற மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) அல்லது பதிவுத் துறை மூலம் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் குறித்த விவரங்களை https://www.rbi.org.in/commonman/english/scripts/NBFCs.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
பொதுமக்கள் போலி நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை மட்டுமே நம்பி முதலீடு செய்யாமல், மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.