Vettri Payanam Thittam: அக்டோபர் 2ஆம் தேதி தவெக அரசு வெற்றி பயணத் திட்டத்தை துவங்கி வைத்தது. இதன் மூலம், பெண்கள் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வெற்றிப் பயணம் திட்ட பேருந்துகளில் ஆண்களுக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் மகளிர் விடியல் பயண பேருந்து திட்டம் என தொடங்கப்பட்டது. இதன் மூலம் பெண்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என வாக்குறுதியாக அளித்தார்.
பின்னர், தவெக ஆட்சியை பிடித்த நிலையில, முதல்வர் விஜய் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார். வெற்றிப் பயணம் திட்டம் மூலம் மூலம் பெண்கள் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ், மொஃபுசில் பேருந்துகளில் பெண்கள், திருநர்கள் இலவசமாக பயணிக்கலாம். இத்திட்டம் மூலம் பெண்கள் 80 கி.மீ வரை மட்டுமே இலவசமாக பயணிக்க முடியும். இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், வெற்றிப் பயணம் திட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் ஆண்களுக்கு கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், தற்போது ரூ.38 ஆக குறைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல, நெல்லை - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு எண்ட் டூ எண்ட் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டதாகவும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ.40 ஆகவும், சாதாரண பேருந்துகளில் ரூ.35 ஆகவும் குறைக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் வெற்றிப் பயணம் பேருந்துகளில் ஆண்களுக்கு 10 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.7 ரூபாயாக குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும, விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலம் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் 128 பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டதாக தகவல்.
திருச்சி கோட்டத்தில் 43 எக்ஸ்பிரஸ் பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து துறையூருக்கு எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இருக்கும்போது, ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டபோது, வெற்றிப் பயணம் திட்டத்தில் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, பெரும்பாலான மாவட்டங்களில் முன்னதாக சாதாரண பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதாகவும், வெற்றிப் பயணம் திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக சாதாரண பேருந்துகள் மாற்றப்பட்டதால் ஆண்களுக்கு கட்டணம் குறைப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் பேசுகையில், "அரசு போக்குவரத்து கழகத்தில் இடைநில்லா பேருந்துகள், எக்ஸ்பிரஸ், சாதாரண பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. வெற்றிப் பயணம் திட்டம் துவங்கப்படுவதற்கு முன்பு, சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
எனவே, வெற்றிப் பயணம் திட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்போது, சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நோககில், பல்வேறு எக்ஸ்பிரஸ் பேருந்துகளை சாதாரண பேருந்துகளாக வகை மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு சாதாரண பேருந்துளாக மாற்றப்பட்ட பேருந்துகளில் கட்டண விகிதாசாரமும் குறைந்த உள்ளது. ஆனால், இடைநில்லா பேருந்துகள், எக்ஸ்பிரஸ் பேருந்துகள் கட்டணம் குறையாமல் அதே நிலையில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.