Tamil Nadu Government Employees Property Declaration rules : தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் தங்களது அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த வருடாந்திர விவரங்களை இணையவழியில் தாக்கல் செய்ய வேண்டும் என மனிதவள மேலாண்மைத் துறை முன்னதாக உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1973 – விதி 7(3)-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, 2025 ஆம் ஆண்டிற்கான சொத்து மற்றும் கடன் விவரங்களை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட (IFHRMS) இணையதளம் வாயிலாக வரும் 31.10.2026-க்குள் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு துறை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நடைமுறையை முடிப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், நீதித்துறை ஊழியர்கள் மத்தியில் எதிர்பாராத முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி அவர்கள் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, கீழ்வரும் பிரிவினருக்கு IFHRMS வாயிலாக சொத்து கணக்கு சமர்ப்பிக்கும் நடைமுறை மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது:
தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் உள்ள நீதித்துறை அலுவலர்கள்
சென்னை உயர்நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் சார்நிலை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதித்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள்
ஏற்கனவே கடந்த 30.09.2026 அன்று சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யக் கோரி வெளியிடப்பட்ட முந்தைய சுற்றறிக்கையைத் தொடர்ந்து, தற்போது உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி இந்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, நீதித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் IFHRMS இணையதளம் வாயிலாகத் தங்களின் சொத்து மற்றும் கடன் அறிக்கையைச் சமர்ப்பிப்பது "மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை" தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த காலக்கெடுவான அக்டோபர் 31 நெருங்கி வரும் வேளையில், இணையதளப் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் பணியாளர்கள் எதிர்கொண்டு வந்த நெருக்கடிக்கு இந்த அறிவிப்பு பெரும் ஆசுவாசத்தை அளித்துள்ளது. மற்ற அரசுத் துறையினருக்கு அக்டோபர் 31-ஆம் தேதி கடைசி நாளாக நீடிக்கும் அதே வேளையில், நீதித்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் தற்போதைக்கு சொத்து கணக்கு காட்ட வேண்டியதில்லை என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது