ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்தவரும், வழக்கறிஞருமான 42 வயதான பூபாலன் என்பவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
நேற்று (அக். 16) காலை 7 மணிமுதல் கீழ்ப்பிடகை கிராமம், சிந்தாமணியில் உள்ள பூபாலனின் வீட்டில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தி, பெத்தம்பெட்டமைன் கடத்தல் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியது.
தொடர்ந்து பிரதாபராமபுரத்தில் இருக்கும் பூபாலனின் நண்பர்களின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கக்கன் என்பவரது வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுகன் (27), அவரது சகோதரர் பார்த்திபன் (29), சதீஷ் (30) ஆகியோரை அவர்கள் காவலில் எடுத்தனர்.
இந்த போதைப்பொருள் சென்னையில் இருந்து கார் மூலம் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த 2026 பொதுத்தேர்தலில் கீழ்வேளூர் இடைத்தேர்தலில் தவெகவின் தேர்தல் பொறுப்பாளராகவும் செயலாற்றியது.
இதைத் தொடர்ந்து, ஆளும் தவெக மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் தவெக தோல்வியடைந்திருப்பதாகவும், கடத்தலுக்கு உடந்தையாகவும் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அவரது X பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், "ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் தவெக நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை ஒழிப்பு பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்" என முதலமைச்சர் விஜய்யை கடுமையாக சாடி உள்ளார்.
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும். தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) October 17, 2026
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறது என்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த நெர்வோர்கையும் சுற்றி வளைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கும் ஸ்டாலின், தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்திற்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் தவெகவில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜய்யின் லியோ திரைப்படத்தில், அவர் ஏற்று நடித்த லியோ கதாபாத்திரம் போதைப்பொருளை கடத்தும் குற்றவாளியாகும். அதேபோல், சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர் சரத்தை குறிப்பிட்டு லியோதாஸ், பவுடர் சரத் என ஸ்டாலின் சாடி உள்ளார்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party (மோசமான கட்சி) என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party ஆக Promotion பெற்றுள்ளது என விமர்சித்துள்ளார். Breaking Bad என்பது ஆங்கில வெப்-சீரிஸ் ஆகும், அத்தொடர் மெத்தம்பெட்டமைன் தொடர்பானது என்பதால் ஸ்டாலின் அதை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் சாடி உள்ளார். நேற்றைய தினமே (அக். 16) எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இந்த சம்பவத்தில் தவெக கண்டித்தது மட்டுமின்றி, "இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பூபாலன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக தவெக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாறன் அறிவித்து அறிக்கை வெளியிட்டார்.