ஈரோடு: தமிழக நெசவாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி! பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி-சேலைகளைத் தயாரிக்கும் நெசவாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் எம்.விஜய் பாலாஜி திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி திங்கள்கிழமை கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் ஆணையர் அர்பித் ஜெயின், ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ கே.கே.ஆனந்த்மோகன் மற்றும் இன்னும் சில அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் அமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பொங்கல் பண்டிகையையொட்டி விநியோகிக்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உற்பத்திப் பணிகள் முடிக்கப்பட்டு, அனைத்துத் துணிகளும் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இலவச வேட்டி-சேலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பின்வரும் முக்கிய திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது:
இவற்றைத் தவிர, பருவமழையை ஒட்டி பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை மற்றும் சாக்கடை கால்வாய்களின் தூர்வாரும் பணிகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தூய்மைப் பணிகளை மெற்கொள்ள புதிய உபகரணங்களை அமைச்சர் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
மழைநீர் தடையின்றிச் செல்வதை உறுதிசெய்யும் வகையில், ஓடைகளின் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், வண்டல் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மாநகராட்சிப் பகுதிகளில் சொத்து வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பது, ஓடைகளில் உள்ள வண்டல் மண்ணை அகற்றுவது மற்றும் வடிகால்களைச் சுத்தம் செய்வது உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓடைகளில் தூர்வாரும் பணிகள், சாக்கடையை சுத்தம் செய்தல், குடிநீர் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீக்கப்படும். மேலும், மாநகராட்சியில் சொத்து வரி குறைப்புக்கான நடவடிகையும் எடுக்கப்பட்டு வருகின்றது.
பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து தமிழக முதல்வரின் கவனத்தி்ற்கு கொண்டு சென்ற பிறகு,முதல்வரின் உத்தரவுப் படி துறை அதிகாரிகளுடன் பேசி இந்த வாரம் தீர்வு காணப்படும்." என்று கூறினார்.