சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தீபாவளிக்கு முன்னதாக, டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்பான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் மதுபான விற்பனையில் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ள அரசு நிறுவனமான டாஸ்மாக் (TASMAC), தனது ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான மதுபானக் கடைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் மூடப்பட்டிருந்த நிலையில், 1,729 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (show-cause notices) அனுப்பியுள்ளதுடன், 245 கடை மேற்பார்வையாளர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இந்த நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி'க்கு (environmental and social welfare cess) எதிர்ப்பு தெரிவித்தே ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வரியின் கீழ், மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் (buyback scheme) ஒரு பகுதியாக, நுகர்வோரிடமிருந்து ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
சென்னை மண்டலத்தில் மொத்தம் 341 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதில், 169 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலும் தமிழகத்தின் பிற நிர்வாக மண்டலங்களிலும், விதிமுறை மீறிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சென்னை: சென்னை மண்டலத்திற்குள், திருவள்ளூர் (கிழக்கு), சென்னை (மத்தியம்) மற்றும் சென்னை (வடக்கு) ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அங்கு முறையே 61, 50 மற்றும் 58 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்: சேலம் மண்டலத்தில் மொத்தம் 459 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் சேலத்தில் 155 பேரும், நாமக்கல்லில் 153 பேரும் அடங்குவர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 75 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி: திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் 418 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 185 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 175 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை: மதுரை மண்டலத்தில் மொத்தம் 475 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் 247 பேரும், மதுரை வடக்கு மாவட்டத்தில் 120 பேரும், தேனி மாவட்டத்தில் 101 பேரும் அடங்குவர்.
மொத்தமாக, நவம்பர் 1-ம் தேதி 931 பேருக்கும், நவம்பர் 2-ம் தேதி 798 பேருக்கும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனுமதியின்றி மதுபானக் கடைகளை மூடுவது பொதுச் சேவை விதிகளுக்கு முரணானது என்று தெரிவித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், அரசு நடத்தும் அனைத்து மதுபானக் கடைகளிலும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த, விதிமீறலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு அறிவுறுத்தலின் படி, இந்தத் திட்டத்தின் கீழ், காலி பாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்களே திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஏற்கனவே தங்களுக்கு அதிக பணிகள் இருப்பதாகவும், இதனுடன் பாட்டில்களை திரும்பப் பெறும் பணியையும் சேர்த்து செய்ய முடியாது என்றும், பட்டில்களைத் திரும்பப் பெற தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறி இந்த திட்டத்திற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
டாஸ்மாக் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்:
போராட்டம் நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் தங்கள் கோரிக்கைகளில் திடமாக இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக டாஸ்மாக் நிர்வாகம் டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு மெமோ அனுப்பியது. ஆனால், அதன் பிறகும் போராட்டம் தொடர்ந்தது.
கடைகள் திறக்கப்படாமல் போராடம் தொடர்ந்ததால் நிர்வாகம் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் 1729 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.