தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம் அல்லது வினாத்தாள் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை ஏற்று, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் காலாண்டு, அரையாண்டு, மாதிரித் தேர்வுகள் போன்றவற்றுக்காக வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம் மற்றும் முறையற்ற கட்டணங்கள் எதையும் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டு இடைக்காலத் தடை விதித்தது.
நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செயல்முறைக் கடிதத்தில், "நீதிமன்ற உத்தரவின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் கட்டணமோ அல்லது எவ்விதமான முறையற்ற கட்டணங்களோ கட்டாயம் வசூலிக்கப்படக் கூடாது. இதனை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உடனடியாகத் தெரியப்படுத்தி, கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் அரசு விதிகளுக்கு மாறாக, பல்வேறு பள்ளிகளில் வினாத்தாள் அச்சிடுதல் என்ற பெயரில் கட்டணம் பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் இனி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் என்பதால், இந்த நடைமுறையை தீவிரமாகக் கண்காணிக்கவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.