Tamil Nadu School Education Department : தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act, 2005) கீழ் கோரப்படும் தகவல்களைக் குறித்த காலத்திற்குள், மனுதாரர் திருப்தி அடையும் வகையில் துல்லியமாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (CEO) பள்ளிக்கல்வி இயக்குநரகம் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு தகவல் ஆணையம் பிறப்பித்த முக்கிய தீர்ப்பாணையை மேற்கோள்காட்டி இந்த அதிரடி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரா. கோபிநாத் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழ் கடந்த 18.11.2024 அன்று விண்ணப்பம் ஒன்றை அளித்திருந்தார். அதில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தில் தான் அளித்த மனுக்கள் (எண் 637 முதல் 641 வரை) திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தினசரி முன்னேற்ற அறிக்கையை 10 இனங்களில் தகவலாக வழங்குமாறு அவர் கோரியிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலரால் உரிய முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மனுதாரர், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான நேரடி விசாரணை கடந்த 28.07.2026 அன்று சென்னையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையத்தில் நடைபெற்றது. இதில் மனுதாரரும், பொது அதிகார அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட நேர்முக உதவியாளரும் (மேல்நிலை) நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஆணையம், கடந்த 24.09.2026 அன்று 7 பக்கங்கள் கொண்ட முக்கிய தீர்ப்பாணையைப் பிறப்பித்தது. அந்தத் தீர்ப்பாணை நகல் 05.10.2026 அன்று சென்னை டி.பி.ஐ-யில் (DPI) உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரகத்திற்கு முறைப்படி வந்து சேர்ந்தது.
மாநிலத் தகவல் ஆணையத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய உத்தரவுகள்:
1. இனிவரும் காலங்களில், தகவல் ஆணையத் தீர்ப்பாணையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, RTI சட்டம் 2005 மூலம் பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் உரிய தகவல்களைக் குறித்த காலக்கெடுவுக்குள் தவறாமல் வழங்க வேண்டும்.
2. மனுதாரர்களுக்கு ஏனோதானோவென்று அரைகுறையாகப் பதில் அளிக்காமல், அவர்கள் முழு திருப்தி அடையும் வகையில் தெளிவான விவரங்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
3. தகவல் ஆணையத்தின் 7 பக்க தீர்ப்பாணை நகல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் செயல்முறை ஆணை கிடைத்தமைக்கான ஒப்புதலை உடனடியாக இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநரின் ஒப்புதலுடன் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, அரசுத் துறைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் வகையில் அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.