சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் இன்று (நவ. 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டுகள், துணை சபாநாயகர் வீடியோ விவகாரம், எம்எல்ஏ ஆலோசனை கூட்டம் உள்ளிட்டவை குறித்து அவர் விரிவாக பேசி உள்ளார்.
மேலும் அவர், "சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் அரசு நிறைய சாதனைகளை செய்துள்ளது. நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம், ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்" என்றார்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் விவகாரம் குறித்து பேசிய சி.டி.ஆர். நிர்மல் குமார், "கனிமொழி சமூக ஊடகத்தில் பார்த்தேன், அதன் அடிப்படையில் இந்த பதிவை செய்கிறேன் என வெளியிட்டுள்ளார். இதேபோல நானும் சமூக ஊடகத்தில் பார்த்தேன் என ஒருவர் பதிவு செய்தால் ஏற்று கொள்வாரா...?
என்ன நடந்தது என சம்பந்தப்பட்ட நபரிடம் தொடர்பு கொண்டு பேச முழு உரிமை உள்ளது, ஆனால் சமூக ஊடகத்தில் பார்த்தேன் என பதிவு செய்வது தவறு. ஒவ்வொரு விஷயத்திலும் என்ன இருக்கிறதோ, அதுகுறித்து பதில் அளித்துள்ளேன்" என விளக்கம் அளித்தார்.
Minister Nirmalkumar responds to allegations that a TVK MLA sent an obscene message to the Kallakurichi District Collector. https://t.co/hE9U4ldAqj
— Vignesh Theni (@Vignesh_twitz) November 12, 2026
கள்ளக்குறிச்சி விவகாரம் நடந்ததா இல்லையா என்ற கேள்விக்கு, "யாருடைய தனிப்பட்ட விஷயத்தை பேச நான் இங்கு இல்லை, அதிகாரமும் இல்லை. கனிமொழி சொன்னது போல எதுவும் நடக்கவில்லை. சமூக ஊடகத்தில் பார்த்தேன் அதை பதிவு செய்தேன் என கூறுவது தவறு, அது போல நடைபெறவில்லை" என பதிலளித்தார்.
மேலும் துணை சபாநாயகர் விவகாரம் குறித்து அமைச்சர், "இந்த விவகாரத்தில் மாறி மாறி பேசி வருகின்றனர். உள்ளே என்ன நடந்தது என விசாரித்து வருகிறோம், விசாரணை முடிந்த பின் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
தொடர்ந்து அவர், "முதலமைச்சர் விஜய், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிதியுதவியை வழங்கி உள்ளார். ஏற்கனவே திமுக ஆட்சியில் இதற்காக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
திமுக வழக்கம்போல அரசியல் செய்து ஆணையம் அமைத்துவிட்டு, ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை நிறைவேற்றாமல் வைத்திருந்தனர். தற்போது கூடுதல் நிதியுதவியை முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைத்தையும் ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேசிய அவர், "சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திமுக மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. மிகப்பெரிய பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆட்சியில் 19 ஆயிரம் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர், போக்சோ வழக்குகள் 6,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2,800 வழக்குகள் மே 10ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்ய வேண்டிய வழக்குகள் அதையும் பதிவு செய்துள்ளோம்.
இதுமட்டுமின்றி 3,229 குற்றவாளிகளை கண்டறிந்து 152 நபர்களை தவிர மற்ற அனைவரையும் கைது செய்துள்ளோம். எந்த இடத்திலும் தவறு நடைபெறாமல், துரிதமாகச் செயல்பட காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி உள்ளோம்.
கடந்த ஆட்சியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் 6 மாதத்தில் 5,600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, இந்த ஆட்சியில் 9,600-க்கும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8,500 கைதுகள் மட்டுமே நடந்து தற்போது 14,000 கைதுகள் நடைபெற்றுள்ளது.
இப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம், குற்றச் சம்பவங்களைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் விஜய் எடுத்து வருகிறார். ஆனால் இதை ஒரு கட்டமைப்பாக திமுக உருவாக்கி வருகிறது.
Police are functioning independently under the TVK government - @CTR_Nirmalkumar https://t.co/cK8VV0D1ca
— Vignesh Theni (@Vignesh_twitz) November 12, 2026
தற்போது குற்றம் செய்யும் நபர்களில் பெரும்பாலான நபர்கள் முதல் முறை குற்றவாளிகளாக தனிப்பட்ட பிரச்சினைகளாக உள்ளது. 11 ரவுடிகளுக்கு சம்பந்தம் இருந்தது, அவர்களையும் உடனடியாக கைது செய்துள்ளோம்.
கடந்த 2 ஆண்டுகளில் காவல்துறையில் ஒரு நபர்கூட பணியமர்த்தப்படவில்லை. தற்போது 10,000 பேரை காவல்துறையில் பணியமர்த்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன, கடந்த ஆட்சியை போல் மெத்தனமாகச் செயல்படவில்லை. ஸ்டாலின் போல வீட்டில் தூங்கிவிட்டு மகன் மற்றும் மருமகன் அரசை பார்த்துக்கொள்ளவில்லை. நேரடியாக முதல்வர் எல்லா ஆலோசனை கூட்டங்களையும் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்" என்றார்.
சோலார் பேனல் திட்டம் குறித்து பேசிய அவர், "35 ஆயிரம் ROOF TOP சோலார் பேனல் கேட்டு விண்ணப்பம் வந்துள்ளது. 50 ஆயிரம் இடங்களில் கொண்டு வந்தால் 300 மெகா வாட் கிடைக்கும். மின்வாரியம் சார்பில் ரோந்து வாகனம் மூலம் மின் பழுதுகளை சரி செய்து வருகிறோம்" என்றார்.
முதலமைச்சரை 6 மணிக்கு மேல் தொடர்புகொள்ள முடியவில்லை என்ற திமுகவின் பரந்தாமன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "அவர் ஸ்டாலினை மனதில் வைத்து பேசி வருகிறார், பரந்தாமனுக்கு சீட் கொடுக்கவில்லை. ஸ்டாலின் வீட்டில் சென்று படுத்துக்கொள்வார்.
வாரத்தில் 2 நாட்கள் தான் தலைமை செயலகம் வருவார். எனவே அவர் ஸ்டாலினை மனதில் வைத்து பேசுகிறார், முதலமைச்சர் தினமும் தலைமை செயலகம் வருகிறார், ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்" என்றார்.