திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட மாவட்ட ஆட்சித்தலைவர்பிரத்திக் தாயள் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு அறிவிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், அன்பளிப்பாக வழங்குவதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.
மேலும், தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றே தயாரிப்பு மற்றும் பொதுமக்களுக்கான விநியோகம் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் தயாரித்து பாதுகாப்பான முறையில் உணவு பொருட்களை
மக்களுக்கு வழங்கிட வேண்டும்.
எண்ணெயில் பொறிக்கும் உணவு பலகாரங்களில் செயற்கை நிறமிகளையும், தயாரிப்பில் தரம்குறைந்த பொருட்களையும் எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது. மேலும், பேக்கரி மற்றும் இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்கக் கூடாது. மேலும், ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்கவோ பயன்படுத்தக் கூடாது. ஒரு முறைக்கு மேல் பயன்படுத்திய எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளரிடம் பயோடீசல் தயாரிப்பிற்காக வழங்கி அதற்கான ஒப்புகையினை பெற்றிருக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், பேட்ச் குறியீடு மற்றும் உரிமம் / பதிவு எண் சைவ மற்றும் அசைவ குறியீடு குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத இடத்தில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும். சுகாதாரமான சூழலில் பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை உரிமம் அல்லது பதிவு பெற்று கொள்ள வேண்டும். மேலும், நிரந்தர இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி வைத்திருப்பவர்கள் சுகாதார குறியீடு சான்றிதழ் (Hygiene Rating Certificate) பெற வேண்டும். விதிகளை மீறும் பட்சத்தில் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாங்கள் பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருட்களை வாங்கும் போது உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை பற்றிய விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எனவே, உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், unavupukar@gmail.com, என்ற மின்னஞ்சல் மூலமும், புகார் அளிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியை (TN Food safety consumer App (or) Food safety connect) பதிவிறக்கம் செய்தும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் உள்ள Consumer Grievances வழியாகவும் புகார் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.