சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான தனது 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையை பரஸ்பர சம்மதத்துடன் முடித்துக்கொள்வதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்தது முதல் தமிழக அரசியல் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் இது குறித்த விவாதங்களே நிறைந்துள்ளன.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தற்போதைய தமிழக அமைச்சரவையில் மிகவும் பிரபலமான அமைச்சர்களில் ஒருவர் என்பதால் இந்த செய்தி பொதுமக்களிடமும், சமூக ஊடகங்களிலும் பெரிய பேசுபொருளாகியுள்ளது.
சமீப காலங்களில் நமது சமூகத்தில் விவாகரத்துகள் அதிகரித்து வரும் சூழல் நிலவுகிறது. பணக்காரன், ஏழை, பிரபலம், சாமானியன் என இதற்கு எந்த வித பேதமும் இல்லை. பாகுபாடில்லாமல் அனைத்து மட்டங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக கணவன், மனைவி பிரியும் சூழல் பரவலாகவே உள்ளது. சில பிரிவுகள் அமைதியாக அரங்கேறினாலும், பல பிரிவுகள் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன.
விவாகரத்து என்ற அறிவிப்பு வந்தவுடனேயே, நான்கு சுவருக்குள் அடங்கி இருந்த கோவமும் கவலையும், உணர்வுகளும் உணர்ச்சிகளும், அவதூறு, குற்றச்சாட்டு, ஜீவனாம்சம், கூறைகூறல் என பல்வேறு விதங்களில் பொதுவெளியில் பொங்கி வழிகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஆதவ் அர்ஜுனா-டெய்சி மார்டின் பிரிவு பற்றிய பதிவு முதிர்வின் சாயல் கொண்ட ஒரு அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா மீது எந்தவொரு குறையையும் கூறாமல், இருவரும் பரஸ்பரமாகப் பிரிய முடிவு செய்துள்ளதை அவரது மனைவி டெய்சி மார்டின் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். இது உண்மையில் முதிர்வுதானா? அல்லது, மோதல்களை மூடி மறைக்கும் முகமூடியா?
லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் ஆகியோரின் மகளான டெய்சி மார்டினுக்கும், அப்போது கூடைப்பந்து வீரராக இருந்த ஆதவ் அர்ஜுனாவுக்கும் விளையாட்டு நிகழ்வுகள் மூலம் அறிமுகம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் 2012-ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு மார்ட்டின் குழும நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றார். மேலும், அவர் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அரசியல் வியூக நிறுவனம் ஒன்றையும் நடத்தினார். விசிக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த அவர், பின்னர் அதிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அமைச்சராகப் பதவி வகித்து வரும் நிலையில், இவர்களின் பிரிவு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா அரசியலுக்கு வந்து பரபரப்பாக பேசப்பட்ட போதே, "ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் செயல்பாடுகளுக்கும், எனது குடும்பத்தினரின் தொழிலுக்கும், எனது தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று ஆதவ் அர்ஜுனாவின் மனைவியும், லாட்டரி மார்ட்டினின் மகளுமான டெய்சி மார்ட்டின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வித்தியாசமாக இருந்தாலும், 'லாட்டரி மார்ட்டினின் மருமகன்' என்ற அடையாளத்தை மறைப்பதற்கான உத்தியாக இருந்தது.
ஆதவ் அர்ஜுனா த.வெ.க-வில் இணைந்த காலத்தில், லாட்டரி மார்ட்டினின் பணம் தான், ஆதவ் அர்ஜுனா மூலமாக த.வெ.க.வுக்கு மறைமுகமாக செலவழிக்கப்படுகிறது என்ற தகவல் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதை முறியடிப்பதற்காக 'லாட்டரி மார்ட்டினின் மருமகன்' என்ற அடைமொழியை மறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கலாம்.
மேலும், லாட்டரி மார்ட்டின் மீது, சிக்கிம் லாட்டரி மோசடி வழக்குகள் உள்ளன. பணமோசடி வழக்குகள் உள்ளன. மார்ட்டினின் வீடு, அலுவலகங்களில் 2024 நவம்பரில் நடத்தப்பட்ட சோதனைகளில் கணக்கில் காட்டாத ரூ.12.41 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்ட வழக்கு இருக்கிறது. மார்ட்டினின் ரூ. 451 கோடி சொத்து்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்குகள் உள்ளது. இப்படி மார்ட்டின் குடும்பத்தின் மீதிருந்த வழக்குகளின் சாயம் தன் மீது படாமலிருக்க, தன்மீதும் அந்த கறை படிவதை தவிர்ப்பதற்காக ஆதவ் அர்ஜுனாவால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் இது இருக்கலாம்.
தற்போது விவாகரத்து குறித்து டெய்சி மார்ட்டினின் அறிவிப்பிலும், இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாகவும், இனி தனது தொழில் மற்றும் முடிவுகள் தனியாகவும், ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் மற்றும் தொழில் சார்ந்த செயல்பாடுகள் தனியாகவும் இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். மற்றபடி ஆதவ் அர்ஜுனா மீது எவ்விதக் குற்றச்சாட்டையும் அவர் சொல்லவில்லை.
ஆதவ் அர்ஜுனா மற்றும் மார்ட்டின் குடும்ப உறுப்பினர்கள் (அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உட்பட) இடையே பகிரங்க கருத்து வேறுபாடுகள் நிலவிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆதவும் டெய்சியும் தங்களின் பிரிவிற்கான காரணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும், கடந்த ஓராண்டாகவே இக்குடும்பத்தினரிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது பொதுவெளியில் வெளிப்பட்டு வந்துள்ளன.
பிப்ரவரி 2025-ல், ஆதவுடனான உறவு குறித்தும், குறிப்பாக அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு மத்தியில் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கை குறித்தும் எழுந்த ஊகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் டெய்சி ஒரு பொது அறிக்கையை வெளியிட்டிருந்தார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில், தாங்கள் இருவரும் எப்போதும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில்முறை வாழ்க்கையையும் தனித்தனியாகவே வைத்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
"அனைத்து தொழில்முறை மற்றும் அரசியல் முடிவுகளும், நிலைப்பாடுகளும் ஒருவருக்கொருவர் எந்தவித செல்வாக்கோ அல்லது தலையீடோ இன்றி சுதந்திரமாகவே எடுக்கப்படுகின்றன" என்று அவர் தெரிவித்தார். இத்தகைய ஏற்பாடு, நலன்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தவிர்க்கவும், அவரவர் தொழில்முறை வாழ்க்கையால் அவர்களின் தனிப்பட்ட உறவு பாதிக்கப்படாமல் இருக்கவும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.
மேலும், தங்களை "வெவ்வேறு கண்ணோட்டங்கள், தனித்துவமான கருத்துகள் மற்றும் தனித்தனி பணி வாழ்க்கையைக் கொண்ட நபர்கள்" என்று விவரித்த அவர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் தங்கள் குடும்ப விவகாரங்களை அவர்களின் தொழில்முறை வாழ்க்கையுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
ஆதவ் அர்ஜுனா தவெக கட்சியில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிய சூழலிலேயே இந்த அறிக்கை வெளியானது. லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகனும், ஆதவின் மைத்துனருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கும் ஆதவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளும் 2025-ல் பொதுவெளியில் வெளிப்பட்டன. அந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த கே. அண்ணாமலைக்கு எதிராக ஆதவ் தெரிவித்த கருத்துகளிலிருந்து ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தன்னை விலக்கிக்கொண்டார்.
X தளத்தில் பதிவிட்ட அவர், ஆதவ் தனது அரசியல் மற்றும் நிதி அபிலாஷைகளுக்காகத் தனது மாமனாரின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், இதன் மூலம் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் குற்றம் சாட்டினார். “அவர் தனது மாமனாரின் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்” என்ற கருத்தை நானும் ஆதரிக்கிறேன் என்று ஜோஸ் கூறினார். ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடனான அவரது தொடர்பு குறித்த விமர்சனங்களை முன்வைக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலான கருத்துகளை ஆதவ் தொடர்ந்து வெளியிட்டால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜோஸ் எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து வந்த ஜூன் மாதத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) குறித்து அவதூறான கருத்துகளை ஆதவ் தெரிவிக்கும் காணொளி ஒன்று வெளியானது. இதைக் குறிப்பிட்டு, “தன் மனைவியின் பணத்தில் வாழும் ஆதவ் அர்ஜுனாவுக்கு, வாழ்க்கையில் கடின உழைப்பால் முன்னேறியவர்களின் மதிப்பு தெரியாது” என்று ஜோஸ் விமர்சித்தார். மேலும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜயிடம், ஆதவ் அர்ஜுனாவிடமிருந்து விலகி இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். பின்னர், அந்த காணொளி கசிந்த ஒரு தனிப்பட்ட உரையாடல் என்று கூறி ஆதவ் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
மார்ட்டின் குடும்பத்தினர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த வகையில், முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகளில் இந்தக் குடும்ப உறுப்பினர்கள் முக்கிய பதவிகளில் அங்கம் வகித்து வருகிறார்கள்.
அரசியல் தவிர வர்த்தக ரீதியாகவும் மார்டின் குடும்பம் மிக வலிமையான குடும்பமாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களில் இவர்களின் சொத்து விவரங்கள் கவனம் பெற்றன.
அந்தப் பிரமாணப் பத்திரத்தின்படி,
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனக்குச் சொந்தமான அசையும் சொத்துகளின் மதிப்பை ரூ. 180.03 கோடி என்றும், அசையா சொத்துகளின் மதிப்பை சுமார் ரூ. 17.49 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 197.52 கோடியாக உள்ளது.
தற்போது ஆதவ் அர்ஜுனா-டெய்சி மார்டின் தம்பதியினர் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், அவர்கள் விவாகரத்து நடைமுறைகளைத் தொடங்கினால், இவர்களது நிதி விவகாரங்கள் மீண்டும் கவனத்திற்கு வரக்கூடும். இருப்பினும், தேர்தல் பிரமாணப் பத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு, எந்தெந்தச் சொத்துகள் கூட்டாகச் சொந்தமானவை அல்லது எந்தெந்தச் சொத்துகள் தனிப்பட்ட முறையில் ஒருவருக்குச் சொந்தமானவை என்பதைத் துல்லியமாகக் கூற முடியாது. தற்போதைய நிலையில், நிதித் தீர்வு அல்லது விவாகரத்து நடைமுறைகள் குறித்த எந்த விவரங்களையும் ஆதவ் அர்ஜுனாவோ அல்லது டெய்சி மார்டினோ வெளியிடவில்லை.
இந்த முடிவு ஆதவ் அர்ஜுனா மற்றும் மார்டின் குடும்பம் என இரு தரப்பிற்குமே ஒரு விதத்தில் ஆதாயங்களையே அளிக்கும் என்று அரசியல் வட்டாரங்கக் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பொறுத்தவரை, யாரும் தன்னை மார்ட்டின் மருமகன் என்று சொல்லக்கூடாதென்பதற்காக அவர் எடுத்த அரசியல் மற்றும் வர்த்தகம் சார்ந்த சட்டப்பூர்வ நடவடிக்கையாக மட்டுமே இது தெரிவதாக பல அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, செல்வச் செழிப்பில் திளைக்கும் டெய்சி மார்டின் போன்ற ஒரு பெண், 'நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதையில் செல்கிறோம்.... ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு, அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அவருக்கு மகிழ்ச்சியும், அமைதியும், வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்.... குழந்தையை இருவரும் இணைந்து வளர்ப்போம்' என ஒரு இதமான 'பிரிவு அறிவிப்பை' வெளியிட்டிருப்பது இந்த பிரிவை மேலும் வித்தியாசமானதாகவும், கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வாகவும் மாற்றியுள்ளது.
இதற்கு முன்னரும் பல வி.ஐ.பி தம்பதியினர் சுமுகமாக, அமைதியாக தங்கள் மண வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிந்துள்ளனர். இந்த விலகலையும் அவற்றின் தொடர்ச்சியாகவே பார்க்கலாம். எனினும், இரு தரப்பினருக்கும் அரசியல், வர்த்தகம் என பல துறைகளில் உள்ள செல்வாக்கையும், கணவருக்கும் மனைவி வீட்டாருக்கும் இடையில் இதற்கு முன் பொதுவெளியில் நடந்த சண்டைகளையும் கருத்தில் கொண்டு பார்த்தால், அதன் தாக்கம் ஏதும் இல்லாமல் அமைதியான, தெளிவான அறிவிப்பாக வெளிவந்துள்ள இந்த பிரிவு அறிவிப்பை முதிர்ச்சியின் வெளிப்பாடக்த்தான் பார்க்க முடிகிறது.