Jammu Kashmir: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர டச்சான்-மார்வா (Dachhan-Marwah) பகுதியில், பணியில் இருந்தபோது காணாமல் போன இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகளின் (SPOs) உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களைக் கண்டறிய காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
காவல்துறை அதிகாரிகளின் சமீபத்திய தகவல்படி, காணாமல் போன அந்த சிறப்பு காவல் அதிகாரிகளான ராஷ்பால் குமார் (45) மற்றும் பாபி சந்த் (57) ஆகியோர் டச்சானின் கியார் (Kiar) பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அங்குள்ள சிறப்பு செயல்பாட்டுப் பிரிவில் (SOG) பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
ராஷ்பால் மற்றும் பாபி ஆகியோர், பணியில் இருந்த தங்கள் சக ஊழியர்களுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பதற்காகத் தங்கள் பணி இடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போயினர். தேடுதல் பணியின்போது, தர்ணா டாப் (Dharna Top) பகுதியில் இவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
முதற்கட்ட அறிக்கைகளின்படி, ஒரு அதிகாரியின் தலையிலும், மற்றொருவரின் முதுகிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்கள் உள்ளன. இவை, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இவர்களைத் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளன. இந்த அதிகாரிகள் வைத்திருந்த INSAS மற்றும் .303 ரக துப்பாக்கிகள் காணவில்லை. எனவே, தாக்குதல் நடத்தியவர்கள் அந்த ஆயுதங்களுடன் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தொடக்கத்தில் இந்த அதிகாரிகளின் அலைபேசிகள் பயன்பாட்டில் இருந்ததாகவும், பின்னர் அவை அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தன்று அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருக்கக்கூடிய பிற பயங்கரவாதிகளைக் கண்டறிய காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களைத் தேடி அந்தப் பகுதி முழுவதும் தீவிரமாகச் சோதனையிடப்பட்டு வருகிறது. கிஷ்த்வாரின் கரடுமுரடான, அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதால், பாதுகாப்பு அமைப்புகள் இந்தச் சம்பவத்தை மிகுந்த தீவிரத்துடன் கையாண்டு வருகின்றன.
கிஷ்த்வார் தொகுதி பாஜக எம்எல்ஏ ஷகுன் பரிஹார் இந்த சம்பவம் பற்றி கூறியதாவது:
"இது மிகவும் துயரமான சம்பவம். நமது சிறப்பு காவல் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிக வேதனை அளிக்கிறது. இந்த இரண்டு காவல் அதிகரிகளும் நேற்று இரவு முதல் காணாமல் போயிருந்த நிலையில், இன்று இவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. முதல் உடல் காலை 8:00 மணி அளவிலும், இரண்டாவது உடல் காலை 9:00 மணி அளவிலும் கண்டெடுக்கப்பட்டது. பாகிஸ்தான் தனது தீய சதித்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகளின் (SPO) உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாங்கள் வலியுறுத்துகிறோம். பறிபோன இந்த இரண்டு உயிர்களுக்கும் பதிலடியாக, நான்கு மடங்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்."
ஊடகங்களிடம் பேசிய அவர், தான் தற்போது சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.