Kilambakkam Traffic Diversion: விஜயதசமி, ஆயுத பூஜை, வார இறுதி நாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கன் தென் மாவட்டங்கள் என பிற ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். நேற்று இரவு முதலே பொதுமக்கள் தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால், தாம்பரம் முதல் வண்டலூர், கிளாம்பாக்கம், ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. செங்கல்பட்டு வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கின்றன. இதனால், தாம்பரம் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை எளிதாக்க, சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். அக்டோபர் 21ஆம் தேதி வரை கிளாம்பாக்கம் நோக்கி வரும் வாகனங்கள் போக்குவரத்து மாற்றத்தை அறிந்து கொண்டு, தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என தாம்பரம் போலீசார் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, செங்குன்றத்தில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் வணிக வாகனங்கள் வெளிவட்டச் சாலையில் மாதா பொறியியல் கல்லூரி சர்வீஸ் சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வழியாகவும், வெளிவட்டச் சாலையின் மண்ணிவாக்கம் சர்வீஸ் சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு படப்பை வழியாகவும் செல்ல வேண்டும்.
மாதவரத்தில் இருந்து மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக கிளாம்பாக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் வணிக வாகனங்கள் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை பூந்தமல்லி சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வழியாகவும், மதுரவாயல் பைபாஸ் ஆம்புலன்ஸ் பாயிண்டில் திருப்பிவிடப்பட்டு மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாகவும் செல்ல வேண்டும். எனவே, இவ்வாகனங்கள் பூந்தமல்லி பைபாஸ் சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
🚨 Tambaram City Police – Heavy Vehicle Diversions During Pooja Holidays: The traffic diversions will be in force on October 16, 17, 18 and 19, 2026, from 2:00 PM to 2:00 AM, and from 2:00 PM on October 20, 2026, until 12:00 PM on October 21, 2026. #Trafficdiversion https://t.co/DMSDcMNXuY
— TAMBARAM CITY POLICE (@COPTBM) October 16, 2026
ஜிஎஸ்டி சாலை வழியாக செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் கனரக மற்றும் வணிக வாகனங்கள் வண்டலூர் பழைய மேம்பாலம் அருகே திருப்பிவிடப்பட்டு வெளிவட்டச் சாலை வழியாகச் செல்ல வேண்டும். வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை வழியாக கிளாம்பாக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் வணிக வாகனங்கள் கேளம்பாக்கம் சந்திப்பு மற்றும் செங்கண்மால் ரவுண்டானா பகுதிகளில் திருப்பிவிடப்பட்டு திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
செங்கல்பட்டில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக வரும் கனரக மற்றும் வணிக வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலம் அருகே திருப்பிவிடப்பட்டு ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாகச் செல்ல வேண்டும். வாகன ஒட்டிகள் தங்களது இலக்கை அடைய ஒஎம்ஆர் (OMR) மற்றும் இசிஆர் (ECR) சாலைகளைப் பயன்படுத்துமாறும், தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த போக்குவரத்து மாற்றம், அக்டோபர் 16, 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.00 மணி வரை அமலில் இருக்கும். மேலும், 20.10.2026 அன்று பிற்பகல் 2.00 மணி முதல் 21.10.2026 அன்று நண்பகல் 12.00 மணி வரை அமலில் இருக்கும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.